முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2009, 12:26.28 PM GMT +05:30 ]
இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளும் நிவாரணமும் கிடைக்க இந்திய அரசாங்கம் முன்வர வேண்டுமென்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற பழமொழிக்கேற்ப, இலங்கையில் போர் நின்று விட்டாலும், அப்பாவித்தமிழர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இலங்கை முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த அப்பாவித்தமிழ் மக்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும் வார்த்தைகளால் விளக்க முடியாது என்று நிவாரணப்பகுதிகளை நேரில் பார்த்த இலங்கைத்தலைமை நீதிபதி கவலையுடன் தெரிவித்துள்ளார். கழிப்பிடங்களுக்கு செல்வதற்குக்கூட நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை இலங்கைத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் இலங்கை நாட்டு சட்ட திட்டத்தின்படி இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் இவ்வாறு வெளிப்படையாக சொல்வதால் தான் தண்டிக்கப்படலாம் என்றும், இலங்கைத்தலைமை நீதிபதி கூறி உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இந்தச்சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 11-வது கூட்டத்தொடரில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகார ஆணையர், இலங்கையில் தமிழர்கள் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதற்கு பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்திக்கிறது. இதன் விளைவாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கப்படவில்லை. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தக்கூட இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது. எனவே, இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் அப்பாவி இலங்கைத்தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத்தரவும், சிங்கள மொழி பேசும் மக்களுக்கு இணையாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழவும், தமிழ் இன மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், இந்தியப்பேரரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக